நொய்யல் ஆற்று நீரில் உப்புத்தன்மை விர்ர்ர்
சென்னிமலை, நவ. 2-சென்னிமலை அருகேயுள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதி தொழிற்சாலைகளின் சாயக்கழிவு நீர் அதிகம் வந்ததால் அணை முற்றிலும் மாசுபட்டது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரில், சாயக்கழிவின் அளவு ஜீரோவாக இருக்கும் வரை தண்ணீரை தேக்கி வைக்காமல், நொய்யல் ஆற்றில் அப்படியே வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல வருடங்களாக தண்ணீரை தேக்கி வைக்காமல் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மழை வெள்ள நீர் அதிகம் வந்ததால் சாயக்கழிவே இல்லாமல் சுத்தமான தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது நீரில் உப்பின் தன்மை, 740 டி.டி.எஸ்., என்ற அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், நான்கு நாட்கள் கூட மகிழ்ச்சி நீடிக்கவில்லை. நேற்று காலை வந்த ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை, 1120 டி.டி.எஸ்.,சாக உயர்ந்தது.