கத்திக்குத்தில் அக்கா சாவு சகோதரர் சிறையிலடைப்பு
பவானி, பவானி அருகே வரதநல்லுாரை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஈஸ்வரி, 51; இவரது தம்பி சன்னியாசிபட்டியை சேர்ந்த கண்மணி 45; இவரது மகன் சிவராஜுக்கு, பெண் பார்த்து திருமண ஏற்பாடுகளை ஈஸ்வரி செய்தார். இது பிடிக்காத நிலையில், கடந்த, ௨ம் தேதி அக்கா வீட்டுக்கு சென்ற கண்மணி, வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். அப்போது அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, பவானி போலீசில் சரணடைந்தார். கத்திக்குத்தில் காயமடைந்த ஈஸ்வரி, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் இரவு இறந்து விட்டார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், ஈரோடு மாவட்ட சிறையில் கண்மணியை அடைத்தனர்.