உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்

சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்

ஈரோடு, சிவகிரி இரட்டை கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை சேர்ந்த ராமசாமி-பாக்கியம் தம்பதியினர் கடந்த, ஏப்.,28ல் கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இரட்டை கொலை தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளான ஈரோடு மாவட்டம், அரச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், 48, மாதேஸ்வரன், 52, ரமேஷ், 54, மற்றும் திருட்டு நகையை உருக்கி கொடுத்த நகைக்கடை உரிமையாளர் சென்னிமலை ஞானசேகரன், 36, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.பழங்குற்றவாளிகளான ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர், சென்னிமலையில் இரு வேறு இடங்களில் நடந்த ஆதாய கொலையிலும், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த மூவர் கொலை வழக்கில் ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ஞானசேகரன் ஆகியோர் ஆதாய கொலையில் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டனர். விசாரணை அதிகாரியாக இருந்த பெருந்துறை டி.எஸ்.பி., கோகுல கிருஷ்ணன் மாற்றப்பட்டு, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் நியமிக்கப்பட்டார்.இதில் ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகிரி கொலையில் கைதான நால்வரையும் ஜூன், 13 முதல், 19 வரை போலீசார் கஸ்டடி எடுத்து ஈரோடு, ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த மூவர் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன் மற்றும் ஞான சேகரனை சி.பி.சி.ஐ.டி.போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், சிவகிரி இரட்டை கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட எஸ்.பி., சுஜாதா கூறுகையில்,'' சிவகிரி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான காரணம், இதே கொலையாளிகள் தான் பல்லடத்தில் நடந்த மூவர் கொலையிலும் ஈடுபட்டுள்ளனர். பல்லடம் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, இரு சம்பவத்திலும் ஒரே கொலையாளிகள் ஈடுபட்டுள்ளதால், வழக்கின் விசாரணைக்காக சிவகிரி கொலை வழக்கையும் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !