மேலும் செய்திகள்
வரலட்சுமி விரதம்
19-Jul-2025
ஈரோடு, பதினாறு வகை செல்வத்திற்கும் அதிபதியான, லட்சுமியின் அருள் கிடைக்க வேண்டி, பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கின்றனர். குறிப்பாக, ஆடி மாத பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் பெருகவும் விரதத்தை கடைபிடிக்கின்றனர்.அதன்படி நேற்று வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, ஈரோட்டில் சுமங்கலி பெண்கள் ஒன்றிணைந்து, தங்களது வீடு, கோவில்களில் வரலட்சுமி பூஜை செய்தனர். அப்போது, கலசம் ஒன்றில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு போன்றவற்றை வைத்து, கலசத்தை பட்டு ஆடையால் அலங்கரிக்கப்பட்டது. பின், பஞ்ச லோகத்தால் ஆன, லட்சுமி சிலையை கலசத்தில் வைத்து, பாடல்கள் பாடி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், இனிப்பு பலகாரம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், சுண்டல் உள்ளிட்ட படையல்கள் படைத்து பூஜை செய்தனர்.பின்னர், மஞ்சள் கயிறு வைத்து வழிபாடு நடத்தி, தங்களது கழுத்தில் கட்டிக்கொண்டனர். அதேபோல் தாம்பூல தட்டில், மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு, பூ, புடவை போன்றவை சேர்த்து, சுமங்கலிக்கு தானமாக கொடுத்து ஆசி பெற்றனர். இதேபோல், கோவில்களில் நடந்த வரலட்சுமி விரத வழிபாட்டிலும்,ஏராளமான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.* புன்செய்புளியம்பட்டி, மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், நெய் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், அம்மனுக்கு 1,008 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில், பிளேக்மாரியம்மன் கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் ஊத்துக்குளி அம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரியம்மன், ஆதிபராசக்தி அம்மன் கோவில்களிலும் பூஜை செய்யப்பட்டன.
19-Jul-2025