பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
ஈரோடு: ஆசிரியர் தின விழாவான நேற்று, ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளி ஆசிரியர்களுக்கு, பூ மற்றும் வாழ்த்து அட்டை வழங்கி மாணவியர் வாழ்த்து தெரிவித்தனர். இந்தாண்டில் பணி ஓய்வு பெறும் நான்கு ஆசிரியைகள், ஆசிரிய பணி குறித்து பேசினர். பணி ஓய்வு பெறும் ஆசிரியைகள் கவுரவிக்கப்பட்டனர். இத்தினத்தின் சிறப்பு குறித்து மாணவிகள் உரையாடினர்.இதேபோல் ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ஆசிரியைகளுக்கு பூ, வாழ்த்து அட்டை, இனிப்பு வழங்கி மாணவ, மாணவிகள் வாழ்த்து பெற்றனர். பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காசிபாளையம் அரசு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலும் மாணவ,மாணவிகள், பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சில பள்ளிகளில் ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகளும் நடந்தன.* டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார். அனைத்து ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் தேவேந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரஞ்சிதா, துணைத்தலைவர் பழனிசாமி செய்திருந்தனர். நிகழ்வில் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் செல்வநாயகம், பொருளாளர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் பிரகாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.* பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடநத் ஆசிரியர் தின விழாவுக்கு, தலைமையாசிரியர் முருகானந்தம் தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர்களுக்கும் சக்தி மசாலா நிறுவனம் சார்பாக வெகுமதி, சுற்றுச்சூழல் துறை மூலமாக மஞ்சள் பை கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். மாணவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாணவர்களுக்கும் மரக்கன்று, மஞ்சள் பை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் அருள்குமார், வேளாண் ஆசிரியர் கந்தன் செய்திருந்தனர்.