உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொகுப்பூதிய உயர்வு அறிவிப்பு ஏற்புடையதல்ல

தொகுப்பூதிய உயர்வு அறிவிப்பு ஏற்புடையதல்ல

ஈரோடு, ஏப்.24டாஸ்மாக் ஊழியர்களுக்கு, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிப்பை சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். இதுபற்றி, சம்மேளன பொதுச் செயலர் திருச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில், 22 ஆண்டுகளாக பணி செய்யும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை, பணி வரன்முறை, அரசு ஊழியருக்கு இணையான கால முறை ஊதியம், ஓய்வு வயது, 60 ஆக உயர்த்துதல், இ.எஸ்.ஐ., மருத்துவ திட்டம் அமலாக்கம் போன்றவைகளாகும். இதற்காக பல கட்ட போராட்டம் நடத்தி உள்ளோம். இந்நிலையில், அமைச்சர் அறிவித்துள்ள தொகுப்பூதிய உயர்வு ஏற்புடையதல்ல. கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சி துவக்கத்திலும் ஆண்டுக்கு, 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது. நான்கு ஆண்டு வழங்காத தொகையை சேர்த்து, 2,000 ரூபாயாக உயர்த்தி தருவதாக கூறுவது நகைப்புக்குரியது.அமைச்சர் அறிவித்த உயர்வையும் சேர்த்து மேற்பார்வையாளர் - 16,850 ரூபாய், விற்பனையாளர் - 14,530 ரூபாய், உதவி விற்பனையாளர் - 13,340 ரூபாய் மட்டுமே பெறுவர். இது, டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும், தினக்கூலி ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகையை விட குறைவு. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியரது ஊதியத்தை விட குறைவு.கடந்த, 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில், 10 ஆண்டு காலம் பணிபுரிந்து வருபவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆட்சி முடியும் தருவாயில் கூட நிரந்தரம் செய்யப்படவில்லை. இச்செயலும், ஊதிய உயர்வும் ஊழியர்கள் இடையே ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ