ஒருங்கிணைக்க விதித்த கெடு நிறைவு:செங்கோட்டையனின் முடிவு என்ன?
கோபி:அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க, இ.பி.எஸ்.,க்கு விதித்த பத்து நாட்களுக்கான கெடு நிறைவு பெறும் சூழலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்.,15ல்) முக்கிய முடிவு ஏதேனும் அறிவிப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன், இ.பி.எஸ்., மீதான அதிருப்தியால், கோபியில் கடந்த, 5ல் மீடியாக்கள் முன்னிலையில், மனம் திறந்து பேசினார். 'அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களை பொது செயலர் இ.பி.எஸ்.,க்கு பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தன் போன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்' என பகிரங்கமாக பேட்டியளித்தார். மறுநாளே அவரது கட்சி பதவிகளை பறித்து இ.பி.எஸ்., உத்தரவிட்டார். அவருக்கு ஆதரவு அளித்தவர்களின் பதவிகளையும் அடுத்தடுத்து பறித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கோட்டையன், கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். செங்கோட்டையன் விதித்த பத்து நாட்கள் காலக்கெடு, இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று கோபி கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் தலைமையில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, செங்கோட்டையன் ஏதேனும் அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.