கடைமடையை அடைந்த கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர்: மலர் துாவி, பொங்கல் வைத்து விவசாயிகள் வரவேற்பு
காங்கேயம்: ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், 1.௦௩ லட்சம் ஏக்கர் விவசாய நிலம், கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது வாய்க்காலில் கடந்த, ௧௫ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டிச., 12 வரை, 120 நாட்கள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த, 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பெருந்துறை அருகே வாய்க்கால் பகுதியில் ஏற்பட்ட கசிவால், 19, 20 என இருநாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டது. கசிவு சரி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரானது வாய்க்காலின் கடைமடை பகுதியான, 124வது மைலில் உள்ள மங்களப்பட்டி ஷட்டர் பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள், பவானி தாய்க்கு நேற்று பூஜை செய்தும், பொங்கல் வைத்தும், மலர் துாவியும் தண்ணீரை வரவேற்றனர். இந்த சட்டர் பகுதியில் மூன்றாக தண்ணீர் பிரிகிறது, இதில் மங்களப்பட்டிக்கும், ஈரோடு மாவட்டம் அஞ்சூர் பகுதிக்கும், கரூர் மாவட்டம் மொஞ்சனுார் பகுதி பாசனத்துக்கு செல்கிறது.