நடப்பாண்டில் 300 பேருக்கு வாசக்டமி 25 முதல் டிச.,10 வரை நடக்குது முகாம்
நடப்பாண்டில் 300 பேருக்கு 'வாசக்டமி'25 முதல் டிச.,10 வரை நடக்குது முகாம்ஈரோடு, நவ. 23-ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை (வாசக்டமி), விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார். பின் குடும்ப நல விளக்க கையேடு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். இந்த வாகனம் மூலம், வரும், 25 முதல் டிச.,10 வரை நடக்கும் இலவச சிறப்பு சிகிச்சை முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை இலவச சிறப்பு சிகிச்சை முகாம், மாவட்டத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் வரும், 25 முதல் டிச., 10 வரை நடக்க உள்ளது. மாவட்டத்தில் நடப்பாண்டில், 34 ஆண்களுக்கு கருத்தடை; 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை இலக்கு, 300 என்பதை அடைய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஆண்கள் கருத்தடை சிகிச்சை முறை, 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்க விளைவு இல்லை. கடின உழைப்புக்கு தடையில்லை. அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாயும், உதவிக்கு வருவோருக்கு, 200 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.