ஆள் கடத்தல் வழக்கில் யுவராஜ் உட்பட மூவர் விடுதலை
ஈரோடு, காதல் திருமணம் செய்த தம்பதியை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், ஆயுள் தண்டனை கைதியான தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட மூன்று பேரை விடுதலை செய்து, ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு மாவட்டம், சென்னிமலை முகாசிபிடாரியூரை சேர்ந்த பாலாஜி, 2013ல், தன்னுடன் கல்லுாரியில் படித்த திருவாரூரை சேர்ந்த ஹேமலதா என்பவரை காதலித்து, மேச்சேரியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு ஹேமலதாவின் தாய் மஞ்சுளா எதிர்ப்பு தெரிவித்தார். காதல் தம்பதியினரை, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை மாநில தலைவர் யுவராஜ், சரவணன், அமுதரசு ஆகியோர் கடத்தி, ஹேமலதாவின் தாய் மஞ்சுளாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த தம்பதியினர், பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர்.ஆள் கடத்தல் உட்பட மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து, பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். காதல் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டனர். வழக்கின் விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், அனைத்து சாட்சியங்களும் பிறழ் சாட்சிகளாக மாறின.வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, நேற்று யுவராஜ் உட்பட மூன்று பேரையும் விடுதலை செய்து, நீதிபதி சொர்ணகுமார் தீர்ப்பளித்தார். யுவராஜ் ஏற்கனவே கோகுல்ராஜ் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.