பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் தாய்மாமனுடன் மருமகன் பலி: இருவர் காயம்
சேலம், சேலம் ஆட்டையாம்பட்டி அருகே, இரு பைக்குகள் நேருக்கு, நேராக மோதிக்கொண்ட விபத்தில் மருமகன் இறந்ததையடுத்து, அவரது தாய்மாமனும் இறந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய தொழிலாளி, சிறுமி ஆகியோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் அரியானுார் அருகே சின்ன சீரகாபாடி, பெரிய மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் ராம்குமார், 25. சலுான் தொழில் செய்து வந்த இவர், பகுதி நேரமாக கூரியர் நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார். கடந்த 19ம் தேதி இரவு, 7:30 மணியளவில், சகோதரி வனிதாவின் மகன் பவித்ரன், 6, மகள் புகழினி, 7, ஆகியோரை ஸ்பிளண்டர் பைக்கில் அழைத்து கொண்டு, ஆட்டையாம்பட்டி நோக்கி எஸ்.பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஸ்டார்சிட்டி பைக், நேருக்கு நேராக மோதியது. இதில் ராம்குமார் மற்றும் இரு குழந்தைகள் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அதேபோல, விபத்தை ஏற்படுத்திய, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரசேகரன், 30, என்பவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. அனைவரும், ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும் போது, வழியிலேயே பவித்ரன் இறந்தார்.சேலம் அரசு மருத்துவமனையில், ஐ.சி.யு., வார்டில் அனுமதிக்கப்பட்ட ராம்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். புகழினி, சந்திரசேகரன் ஆகியோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.