அகற்றப்படாத பட்டாசு குப்பை
ஈரோடு; ஈரோடு மாநகரில் தீபாவளியை பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் வழக்கம்போல் கொண்டாடினர். வழக்கம்போல் பொது இடங்களில் பட்டாசு கழிவு சேர்வதோ, போடுவதையே கொஞ்சமும் கவனத்தில் கொள்ளவில்லை. மாநகர துப்புரவு பணியாளர்கள் வந்து அள்ளிச் செல்வார்கள், இதுவெல்லாம் நம் வேலையா? என்பதும் ஒருவித காரணம். மாநகராட்சியும் பட்டாசு குப்பையை அள்ள மண்டலத்துக்கு இத்தனை பேர் என்று அறிவிப்பும் செய்தது. ஆனால், மாநகரின் பெரும்பலான சாலைகளில், பட்டாசு குப்பையை நேற்று காண முடிந்தது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பட்டாசு குப்பை சாலையோரமும், சாலையிலும் பல இடங்களில் கிடக்கிறது. இவற்றை கால்நடைகள் நுகர்வது, உட்கொள்ளும் அபாயம் காணப்படுகிறது. மேலும் சிறு குழந்தைகளும் குப்பையில் பழைய பட்டாசுகளை தேடி அலைவதை பார்க்க முடிகிறது. பட்டாசு குப்பை மழை நீர் வடிகால்களில் விழுந்து நீரோட்டத்தை தடை செய்யும் வாய்ப்புள்ளது. மாநகர துாய்மை பணியாளர்கள் உடனடியாக பட்டாசு குப்பைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.