தினமும் துர்நாற்றத்தில் மூழ்கி தவிக்கும் வைராபாளையம் பாதாள சாக்கடை அடைப்பால் தொடரும் அவலம்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 16வது வார்டு வைராபாளைம், வாய்க்கால் மேடு ரோட்டில், பாதாள சாக்கடையில் இருந்து கொப்புளித்தபடி கழிவுநீர் நேற்று ஆறு போல் வெளியேறியது. குடியிருப்புகள், கடைகள் முன் குளம் போல் தேங்கியதால், மக்கள் மட்டுமின்றி, அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகினர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஒரு மாதத்துக்கும் மேலாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. காலை நேரத்தில் குடியிருப்புகளில் இருந்து அதிக கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. சாக்கடையில் அடைப்பு உள்ளதால், கழிவுநீர் முறையாக செல்ல முடியாமல் மேன்ஹோல் வழியாக சாலைகளில் வெளியேறுகிறது. தினமும் காலை, 7:௦௦ மணிக்கும், ஒருசில நாட்களில் மாலையிலும் வெளியேறி, வீடுகள், கடைகள் முன்பு தேங்குகிறது. இதனால் இப்பகுதியே துர்நாற்றத்தில் மூழ்குகிறது. இவ்வழியே பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகின்றனர்.வாகனங்கள் வேகமாக செல்லும்போது வாரி இறைக்கப்படும் கழிவுநீர், பாதசாரிகள் மற்றும் டூவீலர்களில் செல்வோர் மீது பட்டு தெறிக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை. சுகாதார சீர்கேடுகளுக்கிடையே வாழும் எங்களுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.