பார்வை குறைபாடு தம்பதி வேலை கோரி முறையீடு
ஈரோடு, பவானி, புன்னம் பகுதியை சேர்ந்த பெரியதுரை, 40, அவரது மனைவி ராதா, 39, ஆகியோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:நாங்கள் இருவரும் கண் பார்வை குறைபாடு உடையவர்கள். ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இல்லாததால், ஓராண்டுக்கு முன் விண்ணப்பித்து வாங்கினோம். பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான உபகரணங்கள் கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து வழங்கப்படவில்லை.இதனால் எனது கணவர் நடந்து செல்ல சிரமப்படுகிறார். நாங்கள் இருவரும் வேலைக்கு செல்வதில்லை. பார்வை குறைபாடு உள்ளதால், யாரும் வேலை தர மறுக்கின்றனர். எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயாராக உள்ளோம். வாழ்வாதாரத்துக்காக ஏதாவது ஒரு வேலை வாய்ப்பு வழங்குங்கள். இவ்வாறு கூறினர்.