விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் மனைவி 2வது திருமணம் - கர்ப்பத்தால் கணவர் அதிர்ச்சி
தாராபுரம்:விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கர்ப்பமும் அடைந்ததால் கணவர் அதிர்ச்சி அடைந்தார். நியாயம் கேட்டு விரக்தியுடன் மகளிர் போலீசில் மனு கொடுத்தார்.ஈரோடு மாவட்டம் அரச்சலுார், சில்லாங்காட்டுப்புதுாரை சேர்ந்தவர் பிரகாஷ், 31; திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் நித்யா, 26; இருவருக்கும் இரண்டரை வருடங்களுக்கு முன், திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து, பெற்றோருடன் ஒன்றரை ஆண்டுகளாக நித்யா வசித்து வருகிறார். அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக, நீதிமன்றத்தில் பிரகாஷ் மனு அளித்த நிலையில், விவாகரத்து கோரி நித்யா நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில் அருண் என்பவரை திருமணம் செய்ததாகவும், எட்டு மாத கர்ப்பமாக உள்ளதாகவும், நித்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியாகியுள்ளது. இதைக்கண்டு அருண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக விசாரித்து நியாயம் வழங்குமாறு, தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் நேற்று மனு கொடுத்தார். இதுகுறித்து பிரகாஷ் கூறியதாவது: இன்னும் விவாகரத்து கிடைக்காத நிலையில், நித்யா வேறொரு திருமணம் செய்தது சரியா, அது குற்றமில்லையா? இதே தவறை ஆண் செய்திருந்தால் இந்நேரம் என்னவாகி இருக்கும்? பெண்கள் தவறு செய்து ஆண்கள் பாதிக்கப்பட்டால் நியாயம் கிடைக்காதா? இவ்வாறு கூறினார்.