உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலூர் நகரில் பேனர் கலாசாரம் அதிகரிப்பு; கடும் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருக்கோவிலூர் நகரில் பேனர் கலாசாரம் அதிகரிப்பு; கடும் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பேனர் கலாசாரத்திற்கு நகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கோவிலுாரில் நடைபெறும் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மட்டுமல்லாது, பிறந்த நாள் முதல் மஞ்சள் நீர், காது குத்து விழா, நினைவஞ்சலி என அனைத்து நிகழ்வுகளுக்கும் டிஜிட்டல் பேனர் வைப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. கடைகளுக்கு முன் வைக்கப்படும் பேனர்களால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் புலம்புகின்றனர். குறிப்பாக நான்கு முனை சந்திப்பு, 5 முனை சந்திப்பு, பஸ் நிலையம் அருகே பேனர் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு வைக்கப்படும் பேனர்களுக்கு முறையாக காவல் துறை, நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதில்லை என்றாலும், வைக்கப்படும் பேனர்களை அகற்ற போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து ஆங்காங்கே பேனர்களை வைத்திருந்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து நகரில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற காவல்துறை, நகராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தது.அதனைத் தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் கீதா நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் நகரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தையும் அகற்றினார். அனுமதியின்றி பேனர் வைப்பவர்களை எச்சரிக்கை கூட செய்யாமல் போலீசாரும், நகராட்சி நிர்வாகமும் இரவோடு இரவாக அகற்றுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அபராதம், சட்ட நடவடிக்கை ஏதும் இல்லாததால் பேனர் வைப்பவர்கள் மீண்டும் மீண்டும் ஆங்காங்கே பேனர்களை வைத்து வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.இனிவரும் நாட்களில் அனுமதியின்றி நகரில் வைக்கப்படும் பேனர்களுக்கு வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்க வேண்டும். அதனை அகற்றுவதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேனர் கலாசாரத்திற்கு தீர்வு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி