| ADDED : மார் 30, 2024 06:56 AM
கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கடத்தல் மற்றும் விற்பனை அதிகரிக்கும் சூழல் இருப்பதால், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. மலைகளின் நடுவே சாராயம் காய்ச்சபடும் இடங்களை போலீசார் கடும் சிரமங்களுக்கு இடையே கண்டுபிடித்து அழிக்கின்றனர்.இடத்தினை போலீசார் அறிந்து விட்டால், அதனை தொடர்ந்து வேறு இடங்களில் சாராயம் காய்ச்சப்படுகிறது. மலையில் சாராயம் விற்பனை மற்றும் காய்ச்சுவதை தடுத்து கட்டுபடுத்த போலீசாருக்கு பெரும் சவலாக உள்ளது.மலைப் பகுதியில் காய்ச்சப்படும் சாராயம் பெரும்பாலும், சுற்று வட்டார சமவெளி பகுதிகளுக்கு கிராமப் புறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சமவெளியில் சாராயம் விற்பனை கட்டுபடுத்தினால், மலையில் சாராயம் காய்ச்சுவது குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.ஆனால் போலீசார் அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. பெரும்பாலான கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடக்கிறது. மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதைத் தடுக்கும் பொருட்டு, அவ்வப்போது தனிப்படை போலீசார் அமைத்து சாராய ஊறல்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் சாராயம் காய்ச்சுவது குறையவில்லை.இந்நிலையில், தற்போது லோக்சபா தேர்தலையொட்டி போலீசார் பலர் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவில் நியமித்தும், வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம், கூட்டம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துறை அதிகாரிகள் தற்போது தேர்தல் பாதுகாப்பு பணிகளில் கவனம் செலுத்தி வரும் சூழ்நிலையில், கள்ளச்சாராய வியாபாரிகள் இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு வழக்கத்தை விட சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளது.எனவே கள்ளச்சாராயம் காய்ச்சவது, கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு மலை அடிவார பகுதியில் முக்கிய வழித்தடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.