| ADDED : ஏப் 18, 2024 06:45 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்பாச்சாரி,66; ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவர் நேற்று அதிகாலை வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் சின்னசேலம் அருகே உள்ள கோவில் கும்பாபிேஷக நிகழ்ச்சிக்கு சென்றார்.இந்நிலையில் காலை 9:00 மணி அளவில் குப்பாச்சாரி வீட்டில் இருந்து இரு வாலிபர்கள் வௌியே வருவதை கண்ட, எதிர் வீட்டை சேர்ந்த ராமு, திருடன் திருடன் எனக் கூச்சலிட்டபடி அவர்களை பிடிக்க முயன்றார். அப்போது, இரு வாலிபர்களும் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி கிட்டே வந்தால் குத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டியபடி பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர்.பின்னர் அப்பகுதி மக்கள் குப்பாச்சாரி வீட்டை பார்த்தபோது கதவு உடைந்து கிடந்தது. அருகில் இரும்பு ராடு கிடந்தது. உள்ளே பீரோ திறந்து கிடந்தது.இதுபற்றி தகவலறிந்த குப்பச்சாரி திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.இதுகுறித்து குப்பாச்சாரி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தை சங்கராபுரம் போலீசார் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற கொள்ளையர்கள் இருவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.பட்டப்பகலில், வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் சங்கராபுரம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.