வெயில் எதிரொலி: பசுமைப்பந்தல் அமைக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்க, பசுமைப்பந்தல் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி நகர சாலையில், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி பேருந்துகள் நகர்ப்புறம் வழியாக செல்லும் போது, நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். தற்போது வெயிலின் தாக்கத்தால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பைக்கில் செல்பவர்கள், பாதசாரிகள் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் சிரமமடைகின்றனர். அதேபோல அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதனால், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதி, அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் நிழல் தரும் வகையில் பசுமைப்பந்தல் அமைக்க, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.