தியாகதுருகம் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் மற்றும் சேலம் சாலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றி, விரிவுபடுத்தி சென்டர் மீடியன் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம், கச்சிராயபாளையம் செல்லும் இரு நெடுஞ்சாலைகளும் அகலப்படுத்தி பேரிகார்டுகள் அமைத்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மிக முக்கிய சாலையாக உள்ள சேலம் மற்றும் சென்னை சாலைகளை அகலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கள்ளக்குறிச்சியிலிருந்து சென்னை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சேலம், ஈரோடு, கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மிக முக்கிய சாலையாக இந்த இரு சாலைகளும் உள்ளன.தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு சாலைகளும் அதிகளவில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. சாலை குறுகியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதோடு, அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. சாலைகளின் இருபுறமும் மின் கம்பங்கள் சாலையை ஒட்டியபடி உள்ளன. அதன் அடிப்படையில் பெருவாரியான வணிக நிறுவனங்கள் தங்களின் பொருட்கள் மற்றும் கடைக்கு வரும் வாகனங்களை அங்கு நிறுத்தி வைக்கின்றனர்.இந்த சாலைகளை அகலப்படுத்துவதற்காக கடந்த 2020ம் ஆண்டு அளவிடும் பணிகள் நடந்தன. ஆனால் பணிகள் தொடராமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால் இந்த இரு சாலைகளிலும் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றன. எனவே இந்த இரு சாலைகளை அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைத்து விரிவுபடுத்திட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.