ரூ. 10 கோடி மின்பாதை திட்டத்தில் 8 மின் மாற்றிகள் காணவில்லை; உளுந்துார்பேட்டை விவசாயிகள் அதிருப்தி
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் ரூ. 10 கோடி மதிப்பிலான விவசாய பயன்பாடு மின்பாதை திட்டத்தில், 8 மின் மாற்றிகளை பொருத்தாமல் திட்டத்தை முடித்து விட்டதாக அறிக்கை அளித்துள்ளது, விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் விவசாய பயன்பாட்டிற்கு தடையற்ற மின்சேவை கிடைக்க மத்திய அரசு தீன் தயாள் உபத்யாயா கிராம ஜோதி யோஜனா திட்டம் கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி, விவசாய பயன்பாட்டிற்கு புதிய மின் கம்பங்கள், மின்கம்பிகள் அமைத்து, தனி மின்பாதை, மற்ற பயன்பாட்டிற்கு தனி மின்பாதை அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மிகவும் நீளமான ஏ.குமாரமங்கலம் மின்பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 10 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் ஏ.குமரமங்கலம், கணையார், வெள்ளையூர், ஏமம், மூலசமுத்திரம், பு.கொணலவாடி, பு.கிள்ளனுார், எ.குறும்பூர், ஆர்.ஆர்.குப்பம், காட்டுநெமிலி, நாச்சியார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, பழைய மின் கம்பிகள் அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் நட்டு, விவசாய பயன்பாட்டிற்கு தனி, மற்ற பயன்பாட்டிற்கு தனியாக, ஆறு லைன் மின் கம்பிகள் அமைத்து புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடந்தது. புதிய மின் கம்பங்கள், மின் மாற்றியில் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் கடந்த 3 ஆண்டுகளாக இப்பணி கிடப்பில் போட்டப்பட்டுள்ளது. பு.கிள்ளனுாரில் புதியதாக அமைக்கப்பட்ட எஸ்.எஸ். 8,9,10 மற்றும் ஏ.குறும்பூர் எஸ்.எஸ். 8, 9,10 மற்றும் நாச்சியார் பேட்டை எஸ்.எஸ். 4,7 ஆகிய எட்டு மின் மாற்றி கட்டமைப்புகளில் மின்மாற்றிகள் இதுவரை பொறுத்தவில்லை. ஆனால், ரூ. 10 கோடி திட்டப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டதாக மின்துறை உயர் அதிகரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 8 இடங்களில் புதிதாக அமைக்க வேண்டிய மின்மாற்றிகள் எங்கு சென்றது என தெரியவில்லை. மத்திய அரசின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல் திட்டம் முடிக்கப்பட்டு விட்டதாக அறிக்கை சமர்ப்பித்த அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர் போராட்டத்தில் குதிக்கவும், விவசாய சங்கங்கள் திட்டமிட்டு வருகிறது.