ஏரி, குளங்களை துார் வாரி சீரமைக்க நடவடிக்கை தேவை: பருவமழைக்கு முன் துவங்க விவசாயிகள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி: வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் மாவட்டத்தில் உள்ள ஏரி, வாய்க்கால் மற்றும் ஓடைகளை துார் வாரி சீரமைக்க வேண்டும் என குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மற்றும் புகார் தொடர்பாக பேசியதாவது:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள ஏரி ஓடை மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை துார் வாரி சீரமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசன பைப் அமைக்க 7 ஆண்டுக்கு ஒரு முறை மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், பைப்பில் உள்ள ஓட்டைகள் பெரிதாகி தண்ணீர் வீணாகிறது.எனவே, 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொட்டுநீர் பாசன பைப்பிற்கு மானியம் வழங்க வேண்டும், யூரியா, டி.ஏ.பி., போதிய அளவிற்கு இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும், கெடிலம் ஆற்றுடன் தென்பெண்ணை ஆற்றை இணைக்க வேண்டும்.குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூங்கில்துறைப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டியில் இருந்து வாணாபுரத்திற்கு கூடுதல் பஸ்வசதி ஏற்படுத்த வேண்டும்.கல்வராயன்மலை ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்பதில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை.கோமுகி மற்றும் மணிமுக்தா அணையில் நடைபெறும் ெஷட்டர் பராமரிப்பு பணிகளால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ெஷட்டர் பராமரிப்பு பணிகளை உடனடியாக விரைந்து வேண்டும்.மாவட்டத்தில் சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும். மணிமுக்தா அணையின் கிளை வாய்க்காலில் உள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும். பனை, தென்னை கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.சாத்தனுார் அணை வலது புற கால்வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். சங்கராபுரம் பகுதியில் கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதல் உள்ளது, மரவள்ளி பயிரில் தாக்குதல் ஏற்படுத்தும் மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் மருந்துக்கு தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்க வேண்டும். சங்கராபுரம் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஆயில் திருட்டு அதிகமாக உள்ளது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர்.குறைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.