கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சங்கங்கள், பல்வேறு சமூகத்தினர், மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஓட்டுக்களை பெறுவதில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் சேலம் மாவட்டத்தில் ஆத்துார் (தனி), கெங்கவல்லி (தனி), ஏற்காடு (எஸ்டி) ஆகிய சட்டசபை தொகுதிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இதில் 4 சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க., வசம், 2 சட்டசபை தொகுதிகள் தி.மு.க.,வசம் உள்ளன.லோக்சபா தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக மலையரசன், அ.தி.மு.க., வேட்பாளராக குமரகுரு, பா.ம.க., வேட்பாளராக தேவதாஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜெகதீசன் உட்பட மொத்தம் 21 பேர் களத்தில் உள்ளனர். இதில் பிரதான கட்சியான தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் பா.ம.க, ஆகிய கட்சியின் வேட்பாளர்கள் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.ஆரம்ப கட்டத்தில் மும்முனை போட்டி நிலவும் என கருதப்பட்டது. ஆனால் தொகுதியில் பா.ம.க., தேர்தல் பிரசாரம் தொய்வாக உள்ளதால் இருமுனை போட்டியாக தேர்தல் களம் மாறியது. வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளரான மாவட்ட செயலாளர் குமரகுரு ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்துள்ளார்.தொகுதியில் இவர், பரிச்சையமாக இருப்பதால், ஓட்டுகளை பெற தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அதேபோல், தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பக்கபலமாக உள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவும், தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயனும் தேர்தல் யுக்திகளை கையாளுவதில் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் ஓட்டுகளை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் தொகுதியில் உள்ள பல்வேறு சமூகங்களின் முக்கியஸ்தர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள், தொழிலாளர் சங்கத்தினர், மகளிர் சுய உதவிக் குழுவினர் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகளையும் இரு கட்சியினரும் மாறி மாறி நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அப்போது சங்கத்தினர் வைக்கும் அனைத்து கோரிக்கைக்கும் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றி தருவதாக உத்தரவாதமும் அளித்து உரிய முறையில் கவனித்து குஷி படுத்தி வருகின்றனர்.