கள்ளக்குறிச்சியில் குருப் 2 தேர்வு 9,526 பேர் பங்கேற்க ஏற்பாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 மையங்களில் இன்று நடக்கும் குருப் 2 தேர்வில் 9,526 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 9,526 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தாலுகாவிற்குட்பட்ட 33 மையங்களில் இன்று தேர்வு நடக்கிறது. தேர்வை சிறப்பாக நடத்துவது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் தலைமையில் துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. தேர்வின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களும் கண்காணிப்பதிற்காக, 2 கண்காணிப்பு அலுவலர்கள், 1 பறக்கும் படை, 11 சுற்று குழு அலுவலர்கள், 44 தேர்வுக்கூட ஆய்வாளர்கள், 35 வீடியோகிராபர்கள், 48 போலீசார் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது; தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு நடைபெறும் மையத்திற்கு வர வேண்டும். தேர்வர்களின் நலனுக்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கூடுதல் அரசு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என கூறினார். கூட்டத்தில், திருக்கோவிலுார் துணை ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.