கோவில் உண்டியலை உடைத்து திருடிய சகோதரர்கள் கைது
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஊஞ்சலாயம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் சத்தம் கேட்டது. உடன், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிலர் அருகில் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் இருவர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து, அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டிருந்தனர்.அவர்களை, பொதுமக்கள் பிடித்து வரஞ்சரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஏமத்துாரை சேர்ந்த கலியபெருமாள் மகன்கள் கண்ணன்,28; காளியப்பன்,32; என்பது தெரிந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் உண்டியலில் திருடிய பணம் ரூ.354யை பறிமுதல் செய்தனர்.