சின்னசேலம் தமிழ்ச்சங்க ஹைக்கூ திருவிழா
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தமிழ்ச் சங்கம் சார்பில் ஹைக்கூ திருவிழா நடத்தப்பட்டது. சின்னசேலம் அரிசி ஆலை அரங்கில் சின்னசேலம் தமிழ்ச் சங்கம், அறம் செய விரும்பு கல்வி, சமூக தொண்டு அறக்கட்டளை இணைந்து நேரு படத்திறப்பு, இனிக்கும் காற்று நுால் வெளியீடு, ஹைக்கூ கவிஞர்களுக்கு விருது வழங்கல் என ஹைக்கூ திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி கலைக் கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். சின்னசேலம் தமிழ்ச் சங்க காப்பாளர்கள் அருணா தொல்காப்பியன், அசோகன், செந்தில்குமார், செயலாளர் அம்பேத்கர் முன்னிலை வகித்தனர். அரசு கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மோட்ச ஆனந்தன் தொடக்கவுரையாற்றினார். சின்னசேலம் தமிழ்ச் சங்க தலைவர் கவிதைத்தம்பி விழா நோக்கவுரை வழங்கினார். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கோபாலாகிருஷ்ணன், வெற்றிவேல், கண்ணன் வாழ்த்தி பேசினர். டாக்டர் ரத்தினவேலு நேரு படத்தை திறந்து வைத்தார். ஆசிரியர் முருகன் இனிக்கும் காற்று எனும் ஹைக்கூ தொகுப்பு நுாலை வெளியிட்டார். தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக முனைவர் பட்ட ஆய்வாளர் வாசுதேவன் ஹைக்கூ நுாலை திறனாய்வு செய்தார். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த 50க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்களுக்கு சங்கத்தின் சார்பில் 'ஹைக்கூ கவிச்சுடர்' எனும் விருது வழங்கப்பட்டது. விழாவில் மதனேனாள் கபிரியேல், ஆசிரியர்கள் ராஜா, ராஜன், வேலு, மணி பங்கேற்றனர். பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.