உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதல்வர் ஸ்டாலினுக்கு திண்டிவனத்தில் வரவேற்பு சாலையில் நடந்து சென்று மனுக்களை பெற்றார்

முதல்வர் ஸ்டாலினுக்கு திண்டிவனத்தில் வரவேற்பு சாலையில் நடந்து சென்று மனுக்களை பெற்றார்

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்று, மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று வருகை தந்தார். திண்டிவனத்தில் நேற்று மாலை, நடந்த மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஓங்கூர் டோல்கேட்டில் கலெக்டர் பழனி மற்றும் தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருக்கு, கலெக்டர் பழனி புத்தகம் கொடுத்து வரவேற்றார். மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி, மாவட்ட பொறுப்பாளர்கள் சேகர், கவுதமசிகாமணி, மஸ்தான் எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு மாலை 6:40 மணிக்கு வந்த முதல்வர், காரில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கை கொடுத்தும், வணக்கம் தெரிவித்தபடியும் நடந்து சென்றார். அப்போது பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்ற முதல்வர், அவற்றில் சில மனுக்களை படித்து பார்த்து, தனது உதவியாளிடம் கொடுத்தார்.

சுகாதார நிலையத்தில் ஆய்வு

விழுப்புரத்திற்கு வரும் வழியில், திண்டிவனம் அடுத்த ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதல்வர் ஆய்வு செய்தார். பணியாளர்களின் வருகை பதிவேடு, நோயாளிகள் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு, அதன் விபரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கான நிதி ஊட்டச்சத்து பெட்டகங்களை உரிய நேரத்தில் வழங்குவதை டாக்டர்கள் கண்காணிக்க வேண்டும்; சுகாதார நிலையத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும், நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தாமதமின்றி வழங்கிடவும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட அறிவுறுத்தினார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின், இரவு 10.00 மணிக்கு, மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், முதல்வரின் திட்ட அறிவிப்புகள், சட்டசபை மானிய கோரிக்கையின் போது அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கலெக்டர் பழனி, டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய்நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.முதல்வர் ஸ்டாலின், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை 10:30 மணிக்கு ஜானகிபுரத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி