உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்டத்தில் சைபர் குற்றங்கள்... அதிகரிப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

மாவட்டத்தில் சைபர் குற்றங்கள்... அதிகரிப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

தற்போதைய காலகட்டத்தில் மின்னணு தொழில்நுட்பம், வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கம்ப்யூட்டர்கள், மொபைல்போன்கள் உதவியோடு, வலைதளங்கள் வழியாக ஒருவரிடம் உள்ள பணத்தை தொழில்நுட்ப ரீதியாக பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நுாதன முறையில் நடக்கும் சைபர் குற்றங்கள் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது. ஆன்லைன் மூலம் வேலை வாங்கித்தருவதாக மோசடி, கவர்ச்சிகரமான விளம்பரங்கள், தள்ளுபடி வாயிலாக மோசடி, வங்கி பணம் திருட்டு, முகநுால் வாயிலாக பழகி பணம் மோசடி, அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை மிரட்டி பணம் பறிப்பு, திருமண தகவல் மையம் மூலம் பணம் மோசடி, ஆபாச வீடியோ மூலம் மோசடி, லோன் வழங்குதல் மூலம் மோசடி போன்ற பல்வேறு வகைகளில் சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ் ஆப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் 'ஒர்க் பிரம் ஹோம்' என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து, ஆசையை துாண்டி மக்களை அதிகளவில் ஏமாற்றி வருகின்றனர். இதில் பணத்தை இழக்கும் பெரும்பாலோனார் அவமானம் மற்றும் தர்ம சங்கடமான நிலையை தவிர்ப்பதற்கு புகார் அளிக்க முன்வருவதில்லை. சிறிய அளவில் பணத்தை பறிகொடுப்போர் புகார் கொடுப்பதில்லை. லட்சக்கணக்கில் பணத்தை இழப்போர் மட்டுமே பெரும்பாலும் புகார் அளிக்கின்றனர். மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சைபர் கிரைம் ஸ்டேஷனுக்கு மாதந்தோறும் 50க்கும் மேற்பட்ட புகார்கள் ஆன்லைன் மூலமாக வருகிறது. ஒரு சிலர் நேரடியாக புகார் அளிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் மூலம் கோடிக்கணக்கிலான பணத்தை மக்கள் இழந்துள்ளனர். சமீப காலமாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் ஆன்லைன் மூலமாக தற்போது பணத்தை இழந்து வருகின்றனர். அதேபோல் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், தொழிலபதிர்களை தங்களது மோசடி வலையில் விழும் வகையில் சி.பி.ஐ., வருமான வரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகள் போன்ற பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் டில்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், பீகார், ஒரிசா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இத்தகைய சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுவது போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. வெளிமாநிலத்திற்கு சென்று பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கு ஏற்ப சைபர் கிரைம் போலீசில் அதிக அளவில் போலீசார் இல்லை. மாவட்டத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு காவல் துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும். அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடையேயும் எந்தெந்த முறைகளில் சைபர் குற்றங்கள் நடக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை