உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்களின் அதிருப்தியை குறைக்க களமிறங்கிய தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்

மக்களின் அதிருப்தியை குறைக்க களமிறங்கிய தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்

சட்டசபை தேர்தலுக்கு முன்பே மக்களின் அதிருப்தியை குறைக்க மாவட்டத்தில் உள்ள தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் களமிறங்கி தாராளம் காட்டி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன.இதில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களாக சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், உளுந்துார்பேட்டை மணிக்கண்ணன் ஆகியோரும், கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக செந்தில்குமார் உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் கள்ளக்குறிச்சியையும் சேர்த்து 4 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்துடன் ஆளுங்கட்சியினர் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலை பொருத்தவரை 4 தொகுதிகளிலும் தி.மு.க., முன்னிலை பெற்றது. இதை அடிப்படையாக வைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் எந்தெந்த வார்டுகளில் தி.மு.க.,வுக்கு ஓட்டு குறைவாக கிடைத்துள்ளது என்ற பட்டியலை எடுத்துள்ளனர். அதற்கான காரணம் மற்றும் அந்த பகுதியில் தி.மு.க.,வுக்கு எதிராக தேர்தல் பணி செய்தவர்கள் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் அடுத்த கட்ட நிர்வாகிகளைக் கொண்டு பலகீனமான இடங்களில் அதிருப்தியை சரிகட்டி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இது போன்ற வார்டுகளில் மக்களின் கோரிக்கை என்னவென்று கேட்டு அதனை தேர்தலுக்கு முன் பூர்த்தி செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசு திட்டங்கள் யாருக்கெல்லாம் சென்று சேரவில்லை என்பதையும் கண்டறிந்து அவர்களுக்கு அதனை பெற்றுத் தரும் முனைப்பில் இறங்கியுள்ளனர்.அதற்கு முன் அப்பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் வேலு முன்னிலையில் பேசி சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தேர்தல் நெருக்கத்தில் செய்தால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு இப்போதே சரிகட்டி ஓட்டுகளை அள்ள தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் களமிறங்கியுள்ளனர்.இதற்காக 'ப' விட்டமின் தாராளமாக 4 தொகுதியிலும் இறக்கப்படுவதால், நிர்வாகிகள் இப்போதே உற்சாகத்துடன் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை