ரிஷிவந்தியம் தொகுதியில் தி.மு.க.,வின் தீபாவளி பரிசு
த மிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை பிரதான கட்சி தலைவர்கள் துவங்கி விட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பா.ம.க., சார்பில் அன்புமணி, தே.மு.தி.க., சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ரிஷிவந்தியம் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.,வான வசந்தம் கார்த்திகேயன் வரும் தேர்தலில் மீண்டும் தனது வெற்றியை நிலை நாட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக தி.மு.க., இளைஞரணியில் உள்ள அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கு சொந்த செலவில்100 பைக்குகள் வழங்கி, கட்சியினரை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, உள்ளாட்சி பிரதிநிதிகளை சுற்றுலா அனுப்பியும், ஆயுதபூஜையையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு சீருடை உள்ளிட்ட பரிசும் வழங்கினார். தற்போது, தீபாவளி பரிசாக தொகுதியில் உள்ள தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் மற்றும் எந்த கட்சியும் சாராத பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டு வருகிறது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின் பேரில், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் மேற்பார்வையில், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தீபாவளி பரிசாக புடவை வழங்கி வருகின்றனர்.