தச்சூர் பாரதி கல்லுாரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி : தச்சூர் பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (2ம் தேதி) நடக்கிறது. கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தச்சூர் பாரதி கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று 2ம் தேதி நடக்கிறது. காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும் முகாமில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற தமிழக அளவிலான நிறுவனங்கள், மாவட்டத்திலும் உள்ள 150 முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில், 8ம் வகுப்பு தேர்ச்சி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, தோல்வி, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை, மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வி தகுதி உடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். நேர்க்காணலுக்கு வருபவர்கள் தங்களது பயோ டேட்டா, அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் கார்டு, புகைப்படம் எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.