மழையால் எள் பாதிப்பு விவசாயிகள் கலக்கம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில், காற்றுடன் பெய்து வரும் கோடை மழையால் எள் பயிரிட்ட விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் எள் பயிரிடப்பட்டுள்ளது. இது தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக, இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது.இதனால் எள் பயிரிட்ட விவசாயிகள், கவலையில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'எள் அறுவடை செய்து களத்தில் காய வைப்பதற்கு தயார்படுத்தி வைத்திருப்பது ஒரு புறம் என்றால், மறுபுறம் எள் முதிர்வடைய, 5 முதல் 10 நாட்கள் ஆகும் என்பதால் அறுவடைக்கு வயலிலேயே காத்திருக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில், இரவு நேரங்களில் பெய்து வரும் லேசான மழை கூட, எள் பயிரை சேதம் அடைய செய்து விடும். அதனால் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்,' என்றனர்.