உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் உணவு சேகரிப்பு வாகன சேவை துவக்கம்

கள்ளக்குறிச்சியில் உணவு சேகரிப்பு வாகன சேவை துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதிற்கான உணவு சேகரிப்பு வாகன சேவையை கலெக்டர் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம் சேகரித்து தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்கான சேவை பணி துவக்க விழா நடந்தது. வாகன சேவையை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது; உணவு வீணாவதைத் தடுக்கும் பொருட்டு உணவு சேகரிப்பு வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவுகள் சேகரித்து உரிய வெப்பநிலைப்பதத்துடன் உணவுத் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும். மீதமாகும் உணவுகள் குறித்து தகவல் அளித்தால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவு எடுத்துச் சென்று, தேவைப்படுபவர்களுக்கு வழங்குவர். எனவே உணவகங்கள் மற்றும் சுப நிகழ்ச்சி நடத்துவோர், மீதமாகும் உணவுகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்து உதவிட வேண்டும். உணவு தொழில் புரிபவர்கள், குடிநீர் நிறுவனங்கள், பேக்கரி நடத்துபவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்தும் விரிவான பயிற்சியும், தொற்றுநோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பூசி அளிக்கப்படுகிறது என தெரிவித்தார். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பாஸ்கரன், ஷண்முகம், தாரணி, மான்சி மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !