உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோமுகி அணை பூங்கா பராமரிப்பபின்றி... பாழ்; சமூக விரோத செயல்கள் அரங்கேற்றம்

கோமுகி அணை பூங்கா பராமரிப்பபின்றி... பாழ்; சமூக விரோத செயல்கள் அரங்கேற்றம்

கச்சிராயபாளையம் : கோமுகி அணையில் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் பூங்காவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை 900 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அணையின் மூலம் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கல்வராயன் மலையில் பெரியார், மேகம், கவியம், சிறுகலுார், எட்டியாறு உட்பட பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் கரியாலுாரில் படகு துறை, சிறுவர் பூங்கா, மூங்கில் குடில்களும் உள்ளன. கல்வராயன் மலையில் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால் கல்வராயன் மலைக்கு புதுச்சேரி, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கல்வராயன்மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் கோமுகி அணையையே பார்வையிடுவர். இதனால் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க கடந்த பல ஆண்டிற்கு முன்பு, அணை பகுதியில் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டது. அதில், குதிரையில் அமர்ந்து நேரு சவாரி செய்யும் சிலை, குறள் எழுதும் திருவள்ளுவர் சிலை, சிவபெருமான், ஏசு, மரியாள், தியானம் செய்யும் புத்தர், சிங்கம், புலி, சிறுத்தை, காளைமாடு உட்பட பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் காட்சி மேடைகளும் இருந்தன. அழகிய மலர் செடிகள் கொண்ட கண் கவர் பூங்கா, ராக்கெட் வடிவமைப்பும் அமைக்கப்பட்டிருந்தது. அணையின் பூங்காவை பொதுப்பணித்துறை, உரிய முறையில் பராமரிக்க தவறிவிட்டது. இதனால் அணையில் பராமரிப்பின்றி சிலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் பராமரிப்பு இன்றி புதர்மண்டி கிடக்கிறது. இதானல் கோமுகி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு, சேதமடைந்த சிலைகளை சீரமைக்கும் பணி நடந்தது. அப்போது, பூங்காவில் புதிதாக குரோட்டான்ஸ் செடிகள் மற்றும் பல்வேறு அழகு தாவரங்கள் நடவு செய்யப்பட்டன. மேலும் ஓய்வு மண்டபம் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அணை பூங்காவை பராமரிக்க ஆட்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் வழக்கம்போல் மீண்டும் பூங்கா பராமரிப்பு இன்றி பாழடைந்து புதர்கள் வளர துவங்கியது. தற்போது பூங்கா இருக்கும் இடம் தெரியாத படி புதர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதுடன், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. புதர்மண்டி கிடக்கும் இப்பகுதியில் சாராயம் மறைத்து வைத்து விற்பதும், சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. இதனால் கோமுகி அணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் பூங்காவை கடந்து செல்லும் நிலை உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகி அணையை தவிர வேறு சுற்றுலா தளம் ஏதும் இல்லை. எனவே, பாழடைந்து கிடக்கும் கோமுகி அணை பூங்காவை சீரமைப்பதுடன், தொடர்ந்து பூங்காவை பராமரிக்க ஆட்கள் நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !