கப்பு முக்கியம் பிகிலு... த.வெ.க.,வை சமாளிக்க தி.மு.க., வியூகம்
தி ருக்கோவிலுார் தொகுதியில் இளைஞர் பட்டாளத்தை குறி வைத்து தி.மு.க., விளையாட்டு உபகரணங்களை வழங்கியது. வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க.,வின் தாக்கம் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் எதிரொலிக்கும் என்பது அரசியலை உற்று நோக்கும் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் திருக்கோவிலுார் தொகுதியில் இளைஞர்கள் த.வெ.க., விற்கு தாவாமல் இருக்கும் வகையில் அவர்களை தக்க வைக்க விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி நுாதன முறையை கையாண்டு வருகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் அணி மற்றும் இன்னும் பிற விளையாட்டு அணிகளை கணக்கெடுத்து அவர்களை தன் வயப்படுத்தும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக துணை முதல்வர் உதயநிதியின் 48வது பிறந்த நாளை காரணமாக வைத்து, திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட அரகண்டநல்லுாரில் தொகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 3,000 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை 15 லட்சம் மதிப்பில் பொன்முடி எம்.எல்.ஏ., வழங்கினார். இது அரசியலுக்காக அல்ல, உங்கள் விளையாட்டுத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது. இதற்காக நீங்கள் உதயநிதிக்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் கூடவே வைத்ததுடன், விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் 3 கோடி ரூபாய் மதிப்பில் இதே இடத்தில் மினி ஸ்டேடியம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். தொகுதியில் அதிருப்தியை மாற்றி திருப்திபடுத்தும் முயற்சியில் பொன்முடியின் தரப்பு களமாடி வருகிறது என்பது மட்டும் நிதர்சனம்.