மாணவரின் சத்துணவு தட்டில் விழுந்த பல்லி
மூங்கில்துறைப்பட்டு,;மூங்கில்துறைப்பட்டு அருகே சத்துணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர் தட்டில் இறந்த நிலையில் பல்லி விழுந்ததால் அனைத்து மாணவர்களையும் சாப்பிட விடாமல் தடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் சத்துணவு சாப்பாடு போடும் போது ஒரு மாணவரின் தட்டில் இறந்து காய்ந்த நிலையில் பல்லி ஒன்று சாப்பாட்டு தட்டில் விழுந்துள்ளது. இதனைப் பார்த்த சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். உடன் தலைமை ஆசிரியர் லட்சுமி மற்றும் ஆசிரியர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர் தட்டில் பல்லி விழுந்தாலும், மற்ற மாணவர்களையும் சாப்பிடாமல் தடுத்து 54 மாணவர்களையும், வேன் மூலம் வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களை பரிசோதித்த டாக்டர், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைமுருகன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைமுருகன், ஜெகநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரபாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதற்கிடையே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனையில் திருப்தி அடையாத பெற்றோர்கள் சிலர் 30 மாணவர்களை தனி பஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.