கள்ளக்குறிச்சி தொகுதி வளர்ச்சிக்காக லோக்சபாவில் ஒலிக்கும் விவசாயியின் குரல் மலையரசன் எம்.பி., பெருமிதம்
தியாகதுருகம்: கிராமத்து விவசாயியாக இருந்த எனக்கு கள்ளக்குறிச்சி தொகுதியின் எம்.பி., ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மலையரசன் எம்.பி., பெருமிதத்தோடு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது; தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். தியாகதுருகத்தில் பள்ளி படிப்பும், திருச்சி புத்தனாம்பட்டியில் 1993ல் கல்லுாரி படிக்கும்போது, தி.மு.க.,வில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். 1994 ம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் தமிழ் குடிமகன் தலைமையில் கட்சியின் முன்னோடி பொன் ராமகிருஷ்ணன் முன்னிலையில் எனது திருமணம் நடந்தது. கடந்த 2000ம் ஆண்டு கட்சியின் ஒன்றிய பிரதிநிதியாகவும், 2006ம் ஆண்டு சிறுநாகலூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக அப்பகுதி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினேன். அதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சங்க ஒன்றிய தலைவராகவும், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டேன். கடந்த 2011ம் ஆண்டு தி.மு.க., மாவட்ட பிரதிநிதியாகவும், 2020 ம் ஆண்டு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர், கடந்த 2023 இல் தியாகதுருகம் பேரூர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டேன். அமைச்சர் வேலுவின் பரிந்துரையின்படி, துணை முதல்வர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து, கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர். தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஒரு விவசாயியான எனது குரல் கள்ளக்குறிச்சி தொகுதியின் முன்னேற்றத்திற்காக லோக்சபாவில் ஒலித்துக் கொண்டிருப்பது பெருமிதமாக உள்ளது. இவ்வாறு மலையரசன் எம்.பி., கூறினார்.