மாவட்டத்தில் ஜன., 3 முதல் கோமாரி தடுப்பூசி முகாம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு ஜன., 3ம் தேதி முதல் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :மாடு, ஆடு, பன்றி, மான், யானை போன்ற விலங்குகளை தீவிரமாக தாக்க கூடிய வைரஸ் நச்சுயிரி நோய் கோமாரி. இந்த நோய் கால்நடைகளுக்கு கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். மேலும் கால்நடைகள் தீவனம் உட்கொள்ளாது. சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை அருந்தும் கன்றுகளும் நோய் தாக்கி இறக்க நேரிடும். இந்த நோய் 300 கி.மீ., துாரத்தில் காற்றின் வழியே இதர கால்நடைகளை தாக்கும். கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, தேசிய விலங்கின நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி கோட்டத்தில் 1,87,600 கால்நடைகள், திருக்கோவிலுார் கோட்டத்தில் 1,10,400 கால்நடைகள் என மொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறையில் உள்ள 57 தடுப்பூசி செலுத்தும் குழுக்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு கட்டாயமாக கோமாரி தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.