உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தென்பெண்ணை ஆற்றில் ஆக்கிரமிப்பு: காணாமல் போன படித்துறை

தென்பெண்ணை ஆற்றில் ஆக்கிரமிப்பு: காணாமல் போன படித்துறை

திருக்கோவிலூர்; திருக்கோவிலுார் , தென்பெண்ணை ஆற்றின் படித்துறையை மீட்டெடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலுார் தென்பெண்ணையில் பக்தர்களும், பொதுமக்களும் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு வசதியாக பஸ் நிலையம் எதிரில் ஆற்றின் கரையில் படித்துறை இருந்தது. விழா நாட்களில், உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெறும் வைபவங்களில் பெருமாள் இந்த படித்துறையின் வழியாக எழுந்தருளி ஆற்றில் தீர்த்தவாரி காண்பது வழக்கம்.ஆனால் இன்று படித்துறை இருந்ததற்கான அடையாளங்கள் தெரியாத வகையில் மண்ணைக் கொட்டி மூடி, ஆற்றையே சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதன் அருகில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளதே தெரியாத வகையில் மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் குப்பையை கொட்டி, ஆற்றை பட்டா நிலம் போல, வேலி போட்டு பன்றி வளர்ப்பது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுகின்றனர். கொட்டிய மண் சேறும் சகதியுமாகி, பன்றிகள் உலாவுகின்றன. கழிவு நீரும் ஆற்றில் விடப்படுகிறது. புண்ணிய நதியில் ஆக்கிரமிப்பாளர்கள் குப்பையை கொட்டுதல்; பேரூராட்சி நிர்வாகம் கழிவு நீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, படித்துறையை வெளிக்கொணர்ந்து தென்பெண்ணையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''திருக்கோவிலூரின் வளர்ச்சியை திட்டமிட்டு ஒரு கும்பல் அழித்து வரும் நிலையில், பல நூறு ஆண்டுகள் பழமையான படித்துறை உள்ளிட்ட புராதான அமைப்புகளை பேணி பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதனை உணர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை