சமூக விரோதிகளால் பாழாகி வரும் நீலமங்கலம் ஊராட்சி துவக்கப்பள்ளி
கள்ளக்குறிச்சி; நீலமங்கலம் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகளால் பாழாகி வருகிறது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் நரிக்குறவர் வசிக்கும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 25 மாணவர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் உள்ளனர். இரு வகுப்பறைகள் கொண்ட இப்பள்ளியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களும் நாள்தோறும் வேதனையடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கான கழிப்பறை கதவுகளை உடைப்பது, வகுப்பறை சுவர்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். அத்துடன் இரவில் கும்பல் கும்பலாக அமர்ந்து மது அருந்தும் மதுபான கூடமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சமூக விரோதிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க போலீஸ், கல்வித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.