துார்ந்து போன நீலமங்கலம் ஏரி; அரசு அதிகாரிகள் நடவடிக்கை எப்போது?
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் ஏரியை துார் வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 60க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி சுற்று வட்டார பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.கோமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆற்றில் உள்ள தடுப்பணையில் இருந்து ஏரிக்கு நீர் வரத்து ஏற்படுகிறது. மேலும், ஏரியில் முழு கொள்ளவு தண்ணீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணற்று நீர் பாசனத்திற்கும் வழி வகுக்கிறது.இந்நிலையில், ஏரியில் பெரும்பாலான பகுதியில் விழல்புற்கள், சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. பருவ மழை காலங்களில் ஏரியைச் சுற்றிலும் உள்ள பள்ளமான பகுதியில் மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது.ஏரியின் நடுப்பகுதி மேடாக இருப்பதால், முழுமையாக நீர் பிடிப்பு ஏற்படுவதில்லை. பருவ மழை காலங்களில் பள்ளமான பகுதியில் தண்ணீர் நிரம்பியதும், ஏரியின் கோடியிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது.இதனால், கோடை காலங்களில் விரைவாக தண்ணீர் வற்றி போவதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஏரி முழுதும் தண்ணீர் தேங்கும் வகையில் ஏரியை துார்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் கோடை காலங்களில் ஏரியின் அருகே உள்ள குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர்மட்டத்தினால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறைக்கும் தீர்வு ஏற்படும்.எனவே, நீலமங்கலம் ஏரியில் துார்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.