மூடி வைக்கப்பட்ட மேம்பாலம் திறப்பு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேம்பாலம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதில் மூங்கில்துறைப்பட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 10 கோடி மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திறப்பு விழா நடந்தது. பாலத்தின் வடக்கு பக்கம் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில், இணைப்பு சாலை பணிக்கு தேவையான இடத்தை அரசு கையகப்படுத்தாததால் பாலம் கட்டி முடித்து திறந்தும், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பாலத்தின் இருபுறமும் பேரிக்கார்டுகள் வைத்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஒரு வழி சாலையில் போக்குவரத்து செல்லும் போது தினமும் விபத்து ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியில் இணைப்பு சாலைக்காக கடைகள், குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டன. தற்போது சாலை அமைக்க கருங்கல் ஜல்லிகள் கொட்டி வருகின்றனர். அதற்கு முன்னதாக புதிய மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதேபோல் நான்கு வழி சாலையில் ஊர் பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இவற்றினை தவிர்க்க அண்ணா நகரில் இருந்து இளையாங்கண்ணி கூட்ரோடு வரை நான்கு வழி சாலை நடுவே மின்விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.