மேலும் செய்திகள்
ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது
22-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயிலும் ஜே.ஆர்.சி., மாணவர்கள் சார்பில் மேலுார் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி பிரிவு விஷ்ணுமூர்த்தி தலைமை தாங்கினார். ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் மாயகண்ணன், ஊராட்சி தலைவர் தெய்வீகன் கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணுமூர்த்தி பேசியதாவது; தற்போதைய சூழலில் மரங்கள் வெட்டப்படுவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மழையின் அளவு முற்றிலுமாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுற்றுச்சூழல் எளிதில் மாசு அடைகிறது. இதை தவிர்க்க மரங்களை வளர்ப்பதும், பராமரிப்பதும் மிகவும் அவசியம், எனவே அனைவரும் ஒரு மரக்கன்று நட்டு, பராமரிக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து, ஆக்ஸாலிஸ் பள்ளி ஜே.ஆர்.சி., மாணவர்கள் ஏரிக்கரையில் 100க்கும் மேற்பட்ட பனை மர விதைகளை நட்டனர். நிகழ்ச்சியில், ஆக்ஸாலிஸ் பள்ளி முதல்வர் ஜாய்ஸ்ரெக்ஸி மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.
22-Oct-2025