போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பனையேறி பாதுகாப்பு இயக்கம் மனு
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பனை, தென்னைக்கு படையலிட்டு சுவாமி வழிபாடு செய்த பெண்களை எட்டி உதைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைமணி தலைமையிலான நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; சின்னசேலம் பகுதிகளில் கடந்த 4 தலைமுறைக்கு மேலாக 40 குடும்பத்தினர் பனை தொழில் செய்கிறோம். கடந்த 17ம் தேதி குலதெய்வ வழிபாடுகளில் ஒன்றான பனை மற்றும் தென்னைக்கு பூசை மற்றும் படையலிட்டு வழிபாடு செய்தோம். அப்போது, அங்கு வந்த கச்சிராயபாளையம் போலீசார் எங்களது தெய்வ நம்பிக்கை சார்ந்த வழிபாட்டிற்கு இடையூறு செய்யும் வகையிலும், மத சடங்குகளை இழிவுபடுத்தும் விதமாகவும் மிரட்டி பேசினர். மேலும், வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களுடன் ஆண் போலீசார் தள்ளு, முள்ளுவில் ஈடுபட்டு, இரண்டு பெண்களை எட்டி உதைத்தனர். படையலில் ஈடுபட்டவர்கள் மட்டுமில்லாமல், வேடிக்கை பார்த்த நபர்கள் மீதும் வழக்கு பதிந்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். எனவே, குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.