புறவழிச்சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து... அபாயம்; கள்ளக்குறிச்சியில் தொடரும் அவலத்தை தடுக்க நடவடிக்கை தேவை
உளுந்துார்பேட்டை - சேலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கார், பஸ், கனரக லாரி என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. புறவழிச்சாலையில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் வகையில் பல்வேறு இடங்களில் இணைப்பு சாலையும், நீண்ட துாரம் பயணிக்கும் ஓட்டுநர்கள், தங்களது கனரக வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்கும் வகையில் 'சர்வீஸ்' சாலையும் போடப்பட்டுள்ளது. நகர பகுதியை ஒட்டியவாறு உள்ள புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை இருக்காது. புறவழிச்சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஊருக்கு வெளிப்புறத்திலும், பெரிய அளவிலான ேஹாட்டல் உள்ள பகுதிகளில் மட்டுமே சர்வீஸ் சாலை இருக்கும். வாகனங்கள் நிறுத்தம்
ஆனால், பெரும்பாலான டிரைவர்கள் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையை ஒட்டியவாறு இணைப்பு சாலை பகுதியிலும், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதற்காக போடப்பட்டுள்ள தார் சாலையிலும் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக வாகன பட்டறை வைத்திருப்பவர்கள், புறவழிச்சாலை ஓரத்திலேயே பழுதான வாகனங்களை நிறுத்தி சரிசெய்கின்றனர். இதனால், இணைப்பு சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் புறவழிச்சாலையில் வலது, இடது புறத்தில் அதிவேகமாக வரும் வாகனங்களை தெரிந்துகொள்ள முடியாமல் சிரமமடைகின்றனர். விபத்து அபாயம்
குறிப்பாக, குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களும், பள்ளிக்கு செல்பவர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சாலையில் செல்ல முடியாமல் புறவழிச்சாலையில் எதிர்திசையில் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'புறவழிச்சாலையின் ஓரப்பகுதியிலும், குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்காக போடப்பட்டுள்ள சாலையிலும் கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். . மேலும், வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட இடம் என அப்பகுதியில் தகவல் பலகை வைப்பதுடன், விபத்து ஏற்படும் வகையில் வாகனம் நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க நெடுஞ்சாலை போலீசார் மற்றும் 'நகாய்' அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.