செம்மொழி நாள் பேச்சு , கட்டுரை போட்டி மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் காசோலை வழங்கப்பட்டது.கருணாநிதியின் பிறந்த நாள் செம்மொழி நாளாக கடைபிடித்து, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கடந்த மே 9 மற்றும் 10ம் தேதி, பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது. இதில், முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.பள்ளி அளவிலான பேச்சுப்போட்டியில், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் மகாவீரன் முதல் பரிசும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி விஜயலட்சுமி 2வது பரிசும், 10ம் வகுப்பு மாணவி ஜீவபிரியா 3ம் பரிசும் பெற்றனர். கட்டுரை போட்டியில், கடுவனுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா முதல் பரிசும், தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி 2ம் பரிசும், ஜி.அரியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுஷ்யா 3ம் பரிசு பெற்றனர்.கல்லுாரி அளவிலான பேச்சு போட்டியில், கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவி தேவகி முதலிடமும், ரிஷிவந்தியம் அரசு கல்லுாரி மாணவி திவ்யா 2வது இடம், ஆர்.கே.எஸ்., கல்லூரி மாணவி எஃபினா மேரி 3வது இடம் பிடித்தனர். கட்டுரை போட்டியில் ஏ.கே.டி., கல்வியியல் கல்லுாரி பயிற்சி ஆசிரியர் ஜோஸ்பின் முதல் பரிசும், ரிஷிவந்தியம் அரசு கல்லுாரி மாணவி சிவப்பிரியா 2வது பரிசு, கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவி தீபா 3ம் பரிசும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கலெக்டர் பிரசாந்த் பரிசு மற்றும் காசோலைகளை வழங்கி பாராட்டினார். சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.