குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராம எல்லையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள், வாகன ஒட்டிகள் என பலர் தினமும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்கின்றனர். மெயின்ரோட்டில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல சாலை அமைக்கப்படவில்லை. இந்த பகுதியை சுற்றி குடியிருப்புகள் அதிகமாக இல்லாததால் மண்சாலையாகவே உள்ளது. தெருமின் விளக்குகளும் அமைக்கப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில், மண் சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளம் ஏற்பட்டது.இதனால், வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள, வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான சாலையில் சிரமத்துடன் பயணிக்கின்றனர். . எனவே, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.