| ADDED : ஏப் 25, 2024 04:01 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதி கிராமங்களில் குடிநீர் கிடைக்காத விரக்தியில் மக்கள் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக சரிவர தண்ணீர் வரவில்லை என புகார் தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 9:30 மணியளவில் அரசு பஸ்சினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, ஒன்றிய கவுன்சிலர் சுதா மணிகண்டன், ஊராட்சி தலைவர் தனலட்சுமி கோவிந்தன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பிரச்னை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியதன் பேரில், காலை 10:00 மணியளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.அதேபோல், சின்னசேலம் அடுத்த வாசுதேவனுாரில் குடிநீர் வராததை கண்டித்து நேற்று காலை 9:30 மணியளவில் பொதுமக்கள் காலிகுடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர்.வி.மாமாந்துாரில் குடிநீர் வராததை கண்டித்து நேற்று முன்தினம் சாலைமறியல் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, மேட்டுப் பகுதி கிராமங்களில் குடிநீர் பிரச்னை நிலவுவதால், மக்கள் விரக்தியில் தினமும் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண மாற்று வழி இல்லாததால், போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, வெப்ப அலை வீசக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்யும் பொருட்டு, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி நிர்வாக அதிகாரிகளும் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டும்.அதில், மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க தேவையான வழிமுறைகள், தற்காலிகமாக குடிநீர் வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும்.