கள்ளக்குறிச்சி மந்தைவெளி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டி மற்றும் டாடா ஏஸ் வாகன கடைகள் தினமலர் செய்தி எதிரொலியால் நேற்று அகற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் சிவன், பெருமாள், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்கள், திருமண மண்டபம், தர்கா, அரசு அலுவலகங்கள், வணிக கடைகள் உள்ளன. அரசியல் கட்சி கூட்டங்கள், விழிப்புணர்வு பேரணி, ஊர்வலகங்கள் இங்கு நடைபெறும். நகரின் முக்கியமான பகுதியாக இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மந்தைவெளி வழியாக செல்கின்றது. மந்தைவெளி பகுதியில் தள்ளுவண்டி கடைகள், டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி 'ஷெட்' போன்ற அமைப்பை ஏற்படுத்தி கடைகள் அமைத்து இருந்தனர். சா லையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக நகராட்சி கமிஷ்னர் சரவணன் உத்தரவின் பேரில், தள்ளுவண்டி மற்றும் டாடா ஏஸ் வாகன கடைகள் நேற்று அகற்றப்பட்டது.