அரகண்டநல்லுார் ஆசிரியர் நகரில் புதிய கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் பேரூராட்சியில் கட்டப்பட்ட புதிய கழிவுநீர் கால்வாயிலில் தண்ணீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அரகண்டநல்லுார் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர் நகரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய சந்தோஷத்தில் இருந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கட்டி முடிக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தாமல் விட்டு சென்றனர். இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் மழைநீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் தேக்கத்தால் அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.